முல்லைத்தீவு புதைகுழியில் 13 மனித எச்சங்கள் அடையாளம்! – அகழ்வுப் பணி இடைநிறுத்தம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது. இந்நிலையில் மாலை 03.30 மணியளவில் அகழ்வுப் பணி இடைநிறுத்தப்பட்டது.
குறித்த மனிதப் புதைகுழி தொடர்பில் எதிர்வரும் 13 ஆம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றத்தில் அகழ்வுப் பணியுடன் தொடர்புடைய திணைக்களங்கள் மற்றும் அமைப்புக்களுடன் விசேட கலந்துரையாடல் மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கலந்துரையாடலைத் தொடர்ந்தே அகழ்வுப் பணியை முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இன்று காலை 10.00 மணியளவில் தொடங்கிய குறித்த அகழ்வுப் பணி, மாலை 03.30 மணி வரையில் இடம்பெற்றது.
இவ்வாறு இடம்பெற்ற அகழ்வுப் பணியின் பிரகாரம் 13 மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன. அவை தடயவியல் பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டன.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா, தடயவியல் பொலிஸார் உள்ளிட்டவர்களால் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புக்களுக்கு மத்தியில் இன்று அகழ்வுப் பணி இடம்பெற்றது.
கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் நீர் இணைப்பை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தைத் தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டன.
இதைத் தொடர்ந்து கொக்கிளாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து முல்லைத்தீவு நீதிமன்றத்தின் கவனத்துக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பாக 30.06.2023 அன்று நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்
இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் ஜூலை 6 ஆம் திகதி (இன்று) அகழ்வுப் பணியை முன்னெடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் மனித எச்சங்களை அழிவடையாமல் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் பொலிஸாருக்கு நீதிபதி பணிப்புரை விடுத்திருந்தார்.