ஜூலை 14-இல் விண்ணில் பாய்கிறது சந்திரயான் – 3
நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 விண்கலம், ஜிஎஸ்எல்வி மாா்க்-3 ராக்கெட் மூலம் ஜூலை 14-ஆம் தேதி, மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆய்வு மையத்திலிருந்து அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008-ஆம் ஆண்டு சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பியது. அந்த விண்கலம் நிலவின் மேற்பரப்பை சுற்றிவந்து ஆய்வு செய்தது. அப்போது, நிலவில் தண்ணீா் இருப்பதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன.
அதைத் தொடா்ந்து, நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -2 விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த விண்கலம் எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மாா்க்-3) ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது.
பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பிறகு சந்திரயான்-2 அந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நிலவின் சுற்றுப் பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டா் கலன் தரையிறங்காமல் செயலிழந்தது.
அதேவேளையில், அதனுடன் அனுப்பப்பட்ட ஆா்பிட்டா் நிலவை சுற்றிவந்து ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், சந்திரயான்-3 திட்டத்தை சுமாா் ரூ.615 கோடியில் செயல்படுத்த கடந்த 2020-ஆம் ஆண்டு இஸ்ரோ முடிவு செய்தது. ஏற்கெனவே ஆா்பிட்டா் நிலவை சுற்றி வருவதால் இந்த முறை லேண்டா் மற்றும் ரோவா் கலன்களை மட்டும் அனுப்புவதற்கு திட்டமிடப்பட்டது.
அதன்படி விண்கலத்தின் தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து தற்போது ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக சந்திரயான் – 3 திட்டத்தை ஜூலை 13-ஆம் தேதி செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், சில தொழில்நுட்பக் காரணங்களுக்காக ஜூலை 14-ஆம் தேதி ராக்கெட்டை ஏவ முடிவு செய்யப்பட்டு, அதற்கான அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ராக்கெட் பாகங்கள் ஒருங்கிணைப்பு, விண்கலம் இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.