தகுதியுடைய மகளிருக்கு மட்டும் தான் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் – ஜெயக்குமார் விமர்சனம்..!
தகுதியுடைய மகளிருக்கு மட்டும் தான் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் என்பது, திமுகவினருக்கு மட்டுமே பயன்படுத்தபோகும் திட்டம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் புதிய மீன்பிடி துறைமுகத்தை முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். தொடர்ந்து மீனவர்களுடன் அவர்கள் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மீன்பிடி தடைக்கால நிவாரணத்தை திமுக அரசு முறையாக வழங்கவில்லை என குற்றம்சாட்டினார். நிதிநிலை அறிக்கையில் மீன்வளத்துறைக்கு நிதி குறைப்பு செய்யப்பட்டு, திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்று விமர்சித்தார். நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளையும் பாஜக வெல்லும் என அண்ணாமலை பேசியது, அக்கட்சி தொண்டர்களை குஷிப்படுத்தும் வார்த்தைகள் என கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் 2 கோடி இல்லத்தரசிகளுக்கு மகளிர் உரிமை தொகை என அறிவித்துவிட்டு, தற்போது கட்டுப்பாடுகள் விதிப்பது திமுகவினர் மட்டுமே பயன்பெறுவதற்காகவா என சந்தேகம் தெரிவித்தார்.