மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை: 15-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
மேற்குவங்க நேற்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நடைபெற்ற வன்முறை சம்பவங்களால் 15க்கும் அதிகமானோர் உயிரிழந்ததனர்.
மேற்குவங்கத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே கூச் பெஹார் பகுதியில் உள்ள சித்தாய் என்ற இடத்தில் வாக்குச்சாவடி சூறையாடப்பட்டு, வாக்குப்பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது.
கூச்பெஹார் மாவட்டத்தின் பரனசின்னா என்ற இடத்தில் வாக்குச்சாவடியில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து வீசி தீ வைத்தனர். டைமண்ட் ஹார்பர் பகுதியில் வாக்குப்பெட்டி வயல்வெளியில் வீசப்பட்டுதாக பாஜக முன்னாள் எம்பி ஸ்வபன்தாஸ் குப்தா வீடியோ வெளியிட்டார்.
ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் கிராமத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்த நபர் ஒருவர், வாக்குப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். மால்டா மாவட்டத்தில் வாக்குச்சாவடி மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் விரட்டியடித்தனர். இதனிடையே, பாரக்பூர் பகுதியில் நாட்டுத்துப்பாக்கியுடன் சுயேச்சை வேட்பாளரை ஒரு கும்பல் விரட்டியத்த காட்சிகள் அதிர்ச்சியை எற்படுத்தின. முர்ஷிதாபாத், மால்டா உள்ளிட்ட இடங்களில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது.
மருத்துவமனைக்குச் சென்ற மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன், வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எப்படிப்பட்ட ஜனநாயகம் தேவை என கேள்வி எழுப்பினார். மம்தா பானர்ஜியின் கைகளில் ரத்தம் வழிவதாக கூறிய ஆதிர் ரஞ்சன், ரத்தக்கறை படிந்த உள்ளாட்சிகள் தேவையில்லை என கூறினார்.
மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாசுதேப்பூர் பகுதிக்கு சென்ற ஆளுநர் ஆனந்த போஸின் காரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் ஆளுநர் குறைகளை கேட்டறிந்தார்.
தேர்தல் வன்முறையால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் 6 பேர் உயிரிழந்துள்ளதாக கூறிய அம்மாநில அமைச்சர் பாசு, தாங்கள் வன்முறையை அரங்கேற்றியிருந்தால், எங்கள் கட்சியினரையே கொலை செய்வோமா என கேள்வி எழுப்பினார்.