மாகாண அமைச்சுப் பொறுப்புக்களை எம்.பிக்களுக்குப் பகிர்ந்தளிக்க ஜனாதிபதி அதிரடி முடிவு!
மாகாண சபைகளின் கீழிருந்த அமைச்சுப் பொறுப்புகளை அதே அதிகாரத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கலைந்துள்ள மாகாண சபைகளின் அதிகாரங்கள் இப்போது மாகாண ஆளுநர்களின் கீழ் இருக்கின்றன. ஆனால், மாகாணத்தில் அபிவிருத்திச் செயற்பாடுகள் பின்னடைவில் இருப்பதாகப் பல தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாகாண அதிகாரங்களைப் பகிர ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இதன்படி முதலமைச்சர் தவிர்ந்த 4 அமைச்சுப் பொறுப்புகளைக் கொண்டிருக்கும் மாகாண சபையின் அதிகாரங்களை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பகிர்ந்தளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண அமைச்சரின் அதே அதிகாரம் இந்த எம்.பிக்களுக்கு வழங்கப்படுவதுடன் மாகாண ரீதியாகச் செய்யப்படும் வேலைத்திட்டங்களை இவர்கள் ஆளுநரின் ஒப்புதலுடன் மத்திய அரசுடன் இணைந்து அமுல்படுத்த அனுமதி வழங்கப்படவுள்ளது.
மாகாண மேற்பார்வை குழு என்ற கட்டமைப்பின் கீழ் அமுலாகவுள்ள இந்தச் செயற்றிட்டம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை ஜனாதிபதி கோரியுள்ளார் என்று தெரியவருகின்றது. – என்றுள்ளது.