மக்கள் வீட்டுக்குள்ளேயே இருங்கள்.. ஹிமாசல் முதல்வர் வேண்டுகோள்
சிம்லா: ஹிமாசலப் பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு ஹிமாசலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு அறிவுறுத்தியுள்ளார்.
கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், அடுத்த 24 மணி நேரத்துக்கு மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன் என்று ஹிமாசலப் பிரதேச முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியுள்ளார்.
கனமழையால் ஆபத்தான பகுதியில் இருப்பவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்களுக்காக 1100, 1070 மற்றும் 1077 ஆகிய மூன்று உதவி எண்களை அறிவித்தார்.
அரசு 24 மணி நேரமும் மக்கள் சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் மக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவவும், இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கவும் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் தங்கியிருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும் கனமழையால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.
ஹிமாசல பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை கனமழை காரணமாக சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இதுவரை ஹிமாசல பிரதேசத்தில் பெய்த கனமழையால் 14 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் கூறினார். மேலும் கனமழை தொடர வாய்ப்புள்ளதால் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இன்றும் நாளையும் (ஜூலை 10,11) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பியாஸ் ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்ததால், ஞாயிற்றுக்கிழமை, மண்டியின் நாக்வைன் கிராமத்தில் 6 பேர் ஆற்றில் சிக்கினர். கனமழை காரணமாக மண்டியில் உள்ள பஞ்சவக்த்ரா பாலம் இடிந்து விழுந்தது.
ஒரு சில வட இந்திய மாநிலங்களில் கனமழை காரணமாக தொடர்ந்து உயிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும் பல பகுதிகளில் தொடர் மழை காரணமாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் தடைபட்டது.