பரிசோதனையில் இரட்டை குழந்தை.. பிரசவத்தில் ஒரே குழந்தை.. விசித்திரமான புகார்…!
மருத்துவமனை சிகிச்சைகளில் சந்தேகம் உள்ளது, மோசடி செய்கிறார்கள் என்ற புகார்கள் பொதுமக்கள் தரப்பில் இருந்து ஆங்காங்கே வரும். அப்படியொரு விசித்திரமான புகார் ஒன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் எழுந்துள்ளது.
அம்மாநிலத்தின் சித்தார்த் நகர் மாவட்டத்தின் முஹானா பகுதியில் வசிப்பவர் அனுப் குமார். இவரது மனைவி கர்ப்பம் தரித்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவரும் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மனைவியை காட்டி வந்துள்ளார்.
அப்போது ஒரு கட்டத்தில் மனைவிக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்ணின் கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த உறவினர்கள் மற்றொரு இடத்திலும் போய் பரிசோதனை செய்தனர். அங்கும் இரட்டை குழந்தை உள்ளதாக சோதனை முடிவு தெரிவித்தது.
நம் வீட்டிற்கு இரட்டை சந்தோஷம் வரப்போகிறது என தந்தை அனுப் குமாரும், உறவினர்களும் ஆர்வத்துடன் இருந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெண்ணுக்கு பிரசவ வலி வந்துள்ளது. வழக்கமாக காட்டும் தனியார் மருத்துவமனயில் அவர் அனுமதிக்கப்பட்டார். பிரசவம் நடைபெற்ற நிலையில், ஆர்வத்துடன் காத்திருந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி செய்தி வந்தது. பிரசவத்தில் ஒரு குழந்தைதான் பிறந்தது, பெண்ணின் கருவில் ஒரு குழந்தைதான் இருந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தார் பரிசோதனையில் இரட்டை குழந்தை எனக் கூறப்பட்ட நிலையில், எப்படி ஒரு குழந்தைதான் இருக்கும் என கேள்வி எழுப்ப தொடங்கினர். ஒரு குழந்தையை மருத்துவமனை திருடிவிட்டது என புகார் கூறி போராட்டம் செய்துள்ளனர். தொடர்ந்து இவர்களை மருத்துவமனை நிர்வாகம் விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கணவர் அனுப் குமார் இந்த விவகாரம் குறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரணை நடத்தி குற்றம் நடந்திருந்தால் உரிய நீதி வழங்கப்படும் என அதிகாரி உறுதி அளித்துள்ளார்.