வட மாநிலங்களைப் புரட்டிப்போட்ட கனமழை; 41 பேர் பலி
வட மாநிலங்களில் மிகத் தாமதமாகத் தொடங்கிய பருவமழை, கடந்த வாரம் இறுதி முதல் வலுவடைந்து கனமழையால் கடும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
வட மாநிலங்களில் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பியாஸ் மற்றும் சட்லஜ் ஆறுகளில் அபாயகட்டத்தைத் தாண்டி வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது.
ஹிமாசல் உள்ளிட்ட பல மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகள் ஆறுகளைப் போல வெள்ளம் பெருக்கெடுத்து வாகனங்களை அடித்துச் செல்லும் விடியோக்கள், அங்குள்ள நிலைமையை எடுத்துக்கூறுவதாக உள்ளது.
கனமழை காரணமாக ஹிமாசலின் சிம்லா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். இதுவரை மாநிலத்தில் பலி எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 300-க்கும் அதிகமானோா் பல இடங்களில் சிக்கியுள்ளனா். அவா்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தனியார் மற்றும் பொது சொத்து சேத மதிப்பு இதுவரை 4,000 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கனமழை தொடா்பான நிகழ்வுகளால் கடந்த இரு நாள்களில் மட்டும் 17 போ் உயிரிழந்ததாக மாநில முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு தெரிவித்துள்ளாா்.
நிலச்சரிவால் 120-க்கும் அதிகமான சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கனமழையால் மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன; கல்வி நிறுவனங்களுக்கும் செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஹிமாசல் முதல்வா் சுக்கு, உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தாமி ஆகியோரைத் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு பேசிய பிரதமா் மோடி, மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு தொடா்ந்து வழங்கும் என உறுதியளித்தாா். கனமழை காரணமாக மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் முதல்வா்களிடம் பிரதமா் மோடி கேட்டறிந்தாா்.
பஞ்சாபில் தொடா்ந்து 3-ஆவது நாளாக கனமழை பெய்தது. அங்கு மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு முதல்வா் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளாா். மக்கள் யாரும் அச்சமடைய வேண்டாம் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா். பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
ஹரியாணாவில் பெய்த கனமழையால் சில சாலைகள் நீரில் மூழ்கின. அதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. வெள்ள பாதிப்புகள் குறித்து மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினாா்.
ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தில் உள்ள மவுண்ட் அபு பகுதியில் 231 மி.மீ. அளவுக்கு கனமழை பெய்தது. பல பகுதிகளில் மழைநீா் தேங்கியதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவுக்கு பாதிக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தின் மும்பையில் ஆண்டு சராசரியில் இதுவரை 31.17 சதவீத மழை பெய்துள்ளதாக மாநகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக நா்மதை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், தீவுப் பகுதியில் நால்வா் சிக்கிக் கொண்டனா். 13 நேர தொடா் முயற்சிக்குப் பிறகு அவா்களை அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டனா்.