தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாணியில் தமிழ் அரசுக் கட்சியும் மோடிக்குக் கடிதம்!
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து கடிதம் அனுப்பியதைப் போன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் தனித்துக் கடிதம் அனுப்பவுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்துக்கு முன்னதாக இந்தியப் பிரதமர் மோடிக்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோரும் கடிதத்தை அனுப்புவதற்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தீர்மானித்தது. அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களின் கையெழுத்துடன் அனுப்புவதற்கு முடிவு செய்தது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனின் ஒப்பத்துக்காக கடிதம் ஒப்படைக்கப்பட்டது. அவர் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கோருவதை மாத்திரம் குறிப்பிட்டுள்ளமையால் அதனை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சஷ்டியை வலியுறுத்தி கடிதம் அனுப்பியதைப் போன்று, அந்தக் கோரிக்கையை உள்ளடக்கி இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனியாக அனுப்புவதை சம்பந்தன் விரும்பியதையடுத்து தயாரிக்கப்பட்டுள்ள புதிய கடிதம் விரைவில் அனுப்பப்படும் என்று தெரிகின்றது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் கொன்சியூலர் ஜெனரல் ராகேஷ் நட்ராஜ்ஜிடம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இந்தியப் பிரதமருக்கான கடிதம் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனால் நேற்று (10) மாலை ஒப்படைக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில், ஒற்றையாட்சி கட்டமைப்புக்குள் உள்ள எந்தவொரு முன்மொழிவையும் தமிழ் மக்கள் நிராகரிப்பதை இந்தியாவை ஆதரிக்க வேண்டும், அதற்குப் பதிலாக தமிழ்த் தேசத்தை அங்கீகரித்து பாதுகாக்கும் மற்றும் தமிழ் மக்களின் பிரிக்க முடியாத சுயநிர்ண உரிமையை உணர அனுமதிக்கும் இலங்கைக்கான சமஷ்டி அரசமைப்பை ஆதரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.