ஒரே நாளில் யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபச் சாவு!

வெவ்வேறு இடங்களில் காட்டு யானைகள் தாக்கி யுவதி ஒருவர் உட்பட மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த மூன்று மரணங்களும் நேற்று (11) பதிவாகியுள்ளன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலனறுவை – இலங்காபுரம் பிரதேசத்தில் நேற்று மாலை காட்டு யானை தாக்கி 27 வயதுடைய யுவதி ஒருவர் சாவடைந்துள்ளார்.
குறித்த யுவதி தாயாருடன் வயல் வெளிக்குச் சென்ற போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அவருடன் ஒன்றாகச் சென்ற தாய், படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொனராகலை – புத்தல பிரதேசத்தில் நேற்றிரவு காட்டு யானை தாக்கி 54 வயதுடைய ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த நபரை வீதியைக் கடந்து சென்ற யானைகளில் ஒன்று தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அனுராதபுரம் – கஹடகஸ்திகிலிய பிரதேசத்தில் நேற்றுப் பகல் காட்டு யானை தாக்கி 33 வயதுடைய ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.
குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக அப்பகுதியிலுள்ள குளத்துக்குச் சென்ற போது யானை தாக்கியுள்ளது எனவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.