சந்திரிகாவை மீண்டும் சு.கவில் இணைக்கத் திரைமறைவில் நடவடிக்கை!

வீழ்ந்து கிடக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்குச் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் கருதுவதால் அதற்கான நகர்வில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று அறியமுடிகின்றது.
முதலில் சந்திரிகாவுக்கும் சு.கவின் தலைவர் மைத்திரிக்கும் இடையில் இருக்கின்ற மனக்கசப்பை நீக்க வேண்டும். அது நடந்தால்தான் சந்திரிக்காவை மீண்டும் கட்சியில் இணைப்பது சாத்தியம். இதனால் இதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது.
மைத்திரியை 2015 ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக இறக்கி மைத்திரியை ஜனாதிபதியாக்கியதில் பெரும் பங்கு சந்திரிக்காவுக்கு உண்டு. ஆனால், மக்கள் ஆணைக்கு மாறாக 2017 இல் மஹிந்தவை மைத்திரி பிரதமராக்கியதில் இருந்து சந்திரிக்காவுக்கு மைத்திரியுடன் மனக்கசப்பு ஏற்பட்டது.
2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபயவுக்கு ஆதரவு வழங்குவதற்குச் சுதந்திரக் கட்சி முடிவெடுத்ததால் அந்த மனக்கசப்பு மேலும் வலுவடைந்தது. மைத்திரியை வெளிப்படையாகவே விமர்சிக்கத் தொடங்கினார் சந்திரிகா.
இருந்தும், சுதந்திரக் கட்சி வீழ்ந்துவிட்டது. அதைக் கட்டியெழுப்புவதென்றால் சந்திரிகா கட்சியில் இருக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் இப்போது கருதுவதால் அவரை இணைப்பதற்கான நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர்.