அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை.

வடகொரியா அடிக்கடி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை நடத்தி வருகிறது. தென் கொரியாவுடனான மோதல் காரணமாகவும், அமெரிக்கா-தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிராகவும் இது போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த ஆண்டு தொடக்கம் முதலே வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தியது. அமெரிக்கா-தென்கொரியாவின் எச்சரிக்கையை மீறி வடகொரியா சோதனையை நடத்தி வருகிறது. இந்தநிலையில் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியது. வட கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வடகொரியா ஏவி சோதனை நடத்தியதாக தென் கொரியா தெரிவித்தது. இந்த ஏவுகணை, ஜப்பான் கடல் பரப்பில் விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தென்கொரியாவின் கூட்டு படைத்தலைவர்கள், இன்று காலை வடகொரியா தனது ஏவுகணையை ஏவியதை உறுதிப்படுத்தினர்.
ஆனால் ஏவுகணை எவ்வளவு தூரம் பறந்தது உள்ளிட்ட கூடுதல் விவரங்களை தெரிவிக்கவில்லை. ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, வடகெரியா ஏவுகணையை ஏவியதை கண்டறிந்து உள்ளதாக தெரிவித்தது. கொரியா தீபகற்பத்தில் ஜப்பான் கடல் பகுதியில் அணு ஆயுதம் தாங்கிய போர் கப்பலை நிறுத்த அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. இதற்கு வடகொரியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தங்களது வான் வெளியில் அமெரிக்க உளவு விமானம் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா குற்றம் சாட்டியது.
வட கொரியா வான்வெளியில் நுழையும் அமெரிக்கா உளவு விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்றும் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் தான் வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது. இதனால் கொரியா தீப கற்பத்தில் பதற்றம் நிலவுகிறது.