எமது காணிகளைச் சுவீகரித்துக்கொண்டு எமக்கு பிஸ்கட், குளிர்பானம் தருகிறீர்களா? – மண்டைதீவில் மக்கள் ஆவேசம்.

தமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தைக் கடற்படையினர் வழங்கியபோது அவற்றை வாங்க மறுத்தனர் மக்கள்.
யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கு காணி அளவீடு செய்ய நில அளவைத் திணைக்களம் இன்று நடவடிக்கை எடுத்த போது , குறித்த கடற்படை முகாமுக்கு முன்பாகக் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் ஒன்றுகூடி எதிர்ப்புபி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டம் காரணமாக நில அளவை திணைக்களத்தினர் தமது பணியை முன்னெடுக்காது திரும்பிச் சென்றனர்.
அதையடுத்துப் போராட்டம் முடிவுக்கு வந்தபோது, தமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்குப் பிஸ்கட் மற்றும் குளிர்பானங்களைக் கடற்படையினர் வழங்கினர்.
அதற்கு மக்கள், “எங்கள் காணிகளைச் சுவீகரித்துக்கொண்டு எங்களுக்கு பிஸ்கட், குளிர்பானம் தருகிறீர்களா? எங்கள் காணிகளை எங்களிடம் கையளித்து விட்டுச் செல்லுங்கள். எங்களுக்குப் பிஸ்கட், குளிர்பானம் தந்து எங்கள் காணிகளைப் பறிக்காதீர்கள்” – என்று கூறி அவற்றை வாங்க மறுத்தனர்.