45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் 207.55 மீட்டரை எட்டியுள்ளது.
கங்கை ஆற்றின் இரண்டாவது மிகப்பெரிய கிளை நதியான யமுனை ஆறு அதன் அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று பிற்பகல் 1 மணிக்கு யமுனை ஆற்றின் நீர்மட்டம் 207.55 மீட்டரை எட்டியது.
முன்னதாக கடந்த 1978 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 207.49 மீட்டரை எட்டியது. இதையடுத்து 45 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அதிகபட்ச கொள்ளளவை எட்டியுள்ளது.
வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தில்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்பதால் முதல்வர் அரவிந்த் கேஜரிவால், அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
தில்லி பழைய ரயில்வே பாலம் மூடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் தில்லி அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.