தக்காளியை காப்பாற்ற இரவு பகலாக காவல் காக்கும் விவசாயிகள்..!
நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தலைப்பு செய்தியாக தொடர்ந்து நீடித்து வருவது தக்காளி விலை நிலவரம். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அத்தியாவசிய உணவு பொருளான தக்காளி விலை வரலாறு காணாத உயர்வை கண்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி மொத்த விற்பனையில் 1 கிலோ தக்காளி 130 ரூபாய்க்கும் , சில்லறை விற்பனையில் 1 கிலோ தக்காளி 150 ரூபாய்க்கும், சென்னை புறநகரில் ரூ.160 முதல் ரூ.180 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தக்காளி விளைச்சல் அனைத்து மாநிலங்களிலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தட்டுப்பாடு காரணமாக வட மாநிலங்களில் கிலோ 230 முதல் 260 ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.
இது ஒரு புறம் பொதுமக்களை வாட்டி வதைக்கும் நிலையில், விவசாயிகளும் விற்பனையாளர்களும் திருட்டு பயத்தில் தவித்து வருகின்றனர். தங்கத்தை பொத்தி பொத்தி பாதுகாப்பதை போல தக்காளியை பாதுகாக்கும் சூழலுக்கு விவசாயிகளும், விற்பனையாளர்களும் உள்ளனர். ஒரு சில இடங்களில் தக்காளி விற்பனையாளர்கள் கடைக்கு செக்யூரிட்டி பாதுகாப்பு போட்ட சம்பவங்கள் அரங்கேறின.
இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட தக்காளிக்கு இரவு பகலாக காவல்காத்து வருகின்றனர். கர்நாடகா எல்லையை ஒட்டியுள்ள மேட்டுபுலியூர் கிராமத்தில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. பல்வேறு விவசாயிகள் தங்கள் சொந்த நிலங்களில் தக்காளி பரியிட்டு அறுவடைக்காக காத்திருக்கின்றனர்.
இந்த சூழலில் தக்காளி விலை கிடுகிடு உயர்வை கண்டுள்ளதால், அசந்த நேரம் பார்த்து நிலத்தில் இருந்து தக்காளியை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் தூக்கத்தை தொலைத்து வயலிலேயே தங்கள் தக்காளியை காவல் காத்து வருகின்றனர்.
தங்களிடம் ரூ.60இல் இருந்து ரூ.80 வரை தக்காளியை வாங்கிச் சென்று ரூ.100க்கு மேல் வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். கடுமையான உழைப்பை போட்டு இதை பயிரிட்டு வளர்க்கும் எங்களின் வருவாயை கெடுக்கும் விதமாக இந்த திருட்டு சம்பவங்கள் உள்ளன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.