தில்லி தலைமைச் செயலகத்தில் வெள்ளம்! வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு!!
தொடர் மழை பெய்து வருவதால் தில்லி தலைமை செயலகத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும், சாலைகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட வடமாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தலைநகரான தில்லியில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
யமுனை ஆற்றில் அபாயகட்டத்தை மீறி வரலாறு காணாத அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் யமுனை ஆற்றை சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாழ்வான பகுதிகளிலுள்ள ஏராளமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். வீட்டிலிருந்து பணியாற்ற அரசு அலுவலகர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர் மழையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்படவும் வாய்ப்புள்ளது.