20ஆவது திருத்தச் சட்டமூலம் 22இல் சபையில் முன்வைப்பு – நீதிமன்றத்தை நாட பல அமைப்புகள் முடிவு
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது.
அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாதொழித்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி வசம் அதிகாரங்களைக் குவிக்கும் விதத்திலான 20ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 20ஆவது திருத்தத்தில் உள்ள சில சரத்துகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக இரட்டைக் குடியுரிமை தொடர்பில் ஆளுங்கட்சிக்குச் சார்பான அமைப்புகள்கூட விசனம் வெளியிட்டுள்ளன. இவ்வாறான விடயங்களை நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போது அரசுதிருத்தக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
செப்டெம்பர் மாதத்துக்கான இரண்டாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகின்றது. அன்றைய தினமே நீதி அமைச்சரால் முதலாம் வாசிப்புக்கென ’20’ சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை, அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்திலுள்ள சில சரத்துகளைச் சட்ட ரீதியாக உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவதற்கு சில சிவில் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் தீர்மானித்துள்ளன.