சுகாதார அமைச்சர் ஹெகலிய உடனே பதவி விலக வேண்டும் – விமல் வலியுறுத்து.
“சுகாதாரத்துறை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாகியுள்ள சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் உடன் பதவி விலக வேண்டும்” – என்று வலியுறுத்தியுள்ளார் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் குறிப்பிட்டுக் கொள்கின்றார்கள். ஆனால், நடைமுறையில் நிலைமை எதிர்மறையாக உள்ளது. பொருளாதாரப் பாதிப்பின் ஒட்டுமொத்த சுமையும் நடுத்தர மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இலவச சுகாதார சேவை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மருந்துத் தட்டுப்பாடு நெருக்கடி தோற்றம் பெற்றவுடன் அவசர கொள்வனவு முறையில் திறந்த விலை மனுக்கோரல் இல்லாமல் மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் இருந்து அவசர கொள்வனவு முறையில் இறக்குமதி செய்யப்பட்ட மருந்துகளின் தரம் தொடர்பில் பாரிய சர்ச்சை தோற்றம் பெற்றுள்ளது.
மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சிறுபிள்ளை போல் கருத்துரைக்கின்றார்.” – என்றார்.