நகர சபை மதில் உடைந்து வீழ்ந்து பணியாளர் ஒருவர் பரிதாபச் சாவு.

பாணந்துறை நகர சபைக்குச் சொந்தமான மதில் ஒன்று உடைந்து வீழ்ந்த சம்பவத்தில் நகர சபையின் பணியாளர் ஒருவர் அதன் அடியில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (13) இடம்பெற்றுள்ளது என்று பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய அஜித் குமார டி சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பாணந்துறை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள நகர சபைக்குச் சொந்தமான குப்பை கொட்டும் இடத்தின் மதில் சுவருக்கு அருகில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, குறித்த மதில் சுவர் இடிந்து அவரது உடல் மீது விழுந்துள்ளது.
அருகில் இருந்தவர்கள் உடனடியாக இடிபாடுகளை அகற்றி அவரை மீட்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.