இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலியா வெற்றி.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக ஆடிய இங்கிலாந்தின் பில்லிங்ஸ் சதம் வீணானது.
இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மான்செஸ்டரில் முதல் போட்டி நடந்தது. வலைப்பயிற்சியின் போது பந்து தலையில் தாக்கியதால் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இப்போட்டியில் விளையாடவில்லை. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வோர்னர் (6), கேப்டன் ஆரோன் பின்ச் (16) ஏமாற்றினர். மார்கஸ் ஸ்டாய்னிஸ் (43) நம்பிக்கை தந்தார். மார்னஸ் லபுசேன் (21), அலெக்ஸ் கேரி (10) நிலைக்கவில்லை. பின் இணைந்த மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல் ஜோடி விக்கெட் சரிவிலிருந்து அணியை மீட்டது. இங்கிலாந்து பந்துவீச்சை எளிதாக சமாளித்த இவர்கள் அரைசதம் கடந்தனர். ஆறாவது விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்த போது ஆர்ச்சர் ‘வேகத்தில்’ மேக்ஸ்வெல் (77 ரன், 59 பந்து, 4 சிக்சர், 4 பவுண்டரி) போல்டானார். பொறுப்பாக ஆடிய மார்ஷ் (73) கைகொடுத்தார். கம்மின்ஸ் (9), ஆடம் ஜாம்பா (5) ஏமாற்றினர்.
ஆவுஸ்திரேலிய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்தது. ஸ்டார்க் (19), ஹேசல்வுட் (0) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் ஆர்ச்சர், மார்க் உட் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
பில்லிங்ஸ் அபாரம் சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய் (3), ஜோ ரூட் (1), ஜாஸ் பட்லர் (1) ஏமாற்றினர். கேப்டன் இயான் மார்கன் (23) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஜானி பேர்ஸ்டோவ், சாம் பில்லிங்ஸ் விக்கெட் சரிவில் இருந்து அணியை மீட்டனர். பேர்ஸ்டோவ் அரைசதம் கடந்தார். ஐந்தாவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்த போது ஜாம்பா ‛சுழலில்’ பேர்ஸ்டோவ் (84) சிக்கினர்.
மொயீன் அலி (6), கிறிஸ் வோக்ஸ் (10), அடில் ரஷித் (5) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அபாரமாக ஆடிய பில்லிங்ஸ் சதம் கடந்தார். கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 28 ரன் தேவைப்பட்டது. மிட்சல் மார்ஷ் வீசிய 50வது ஓவரில் 8 ரன் மட்டுமே கிடைத்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் பில்லிங்ஸ் (118) அவுட்டானார்.
இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. ஆர்ச்சர் (8) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா 4, ஹேசல்வுட் 3 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஹேசல்வுட் (ஆஸி.,) வென்றார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி செப். 13ல் மான்செஸ்டரில் நடக்கிறது.