ஆயுதம் தாங்கிய குழுவினால் கடத்தப்பட்டதாக பொய் சொன்ன கானியா பாரிஸ்டருக்கு தண்டனை

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த தினமொன்றில் கொழும்பு புனித பிரிட்ஜெட் கான்வென்ட்டுக்கு அருகில் வைத்து ஆயுதம் தாங்கிய குழுவினால் கடத்தப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை செய்ததற்காக சட்டமா அதிபர் அவருக்கு எதிராக இந்த வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
2019 ஆம் ஆண்டு தான் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தகுற்றச்சாட்டை பொய்யானதென ஒப்புக்கொண்ட கானியா பாரிஸ்டர் பிரான்சிஸுக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
சுவிஸ் தூதரகத்தில் பணிபுரியும் கானியா பாரிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு 2 வருட கடுங்காவல் தண்டனையை வழங்கி , அதை 5 வருடங்களுக்கு இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பண்டார பலல்லே நேற்று (14) உத்தரவிட்டார்.
மேலும் அவருக்கு 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் 20 இலட்சம் ரூபா நட்டஈடு செலுத்தும்படி கானியாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, மேற்படி நட்டஈடு மற்றும் அபராதத்தை செலுத்திய பின்னர், தனது நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள அவருக்கான வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் அவர் தெரிவித்தார்.