பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்திய ஜான்சன் & ஜான்சன்
பேபி பவுடர் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் மகாராஷ்டிரா அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளது.
பிரபல அமெரிக்கா நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் குழந்தைகளுக்கான பிரத்தியேக டால்க் பவுடரை தயாரித்து உலகளவில் விற்பனை செய்து வந்தது. இந்த நிலையில், குழந்தைகளுக்கான டால்க் பவுடரில் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய ஆஸ்பெஸ்டாஸ் கனிமம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வழக்குத் தொடர்ந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, கனடா நாடுகளில் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கிடையே, கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம் முலுண்ட் பகுதியில் செயல்பட்டு வரும் ஜான்சன் நிறுவன ஆலையில் உற்பத்தி செய்யப்படும் டால்கம் பவுடர்கள் உயர் தரத்தில் இல்லை என்று கூறி மகாராஷ்டிரா உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் உற்பத்திக்கு தடை விதித்தது. இந்த தடை உத்தரவுக்கு எதிராக முறையீட்டு மனுவை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், தடையை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், குழந்தை பவுடர் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை ஜான்சன்& ஜான்சன் திரும்ப ஒப்படைத்துள்ளது. இந்த முடிவு குறித்து அந்நிறுவனம் தெரிவிக்கையில், ‘ டால்க் பவுடரை பாதுகாப்பு குறித்த பரப்புரைக்கு, உரிமத்தை திரும்ப ஒப்படைப்பதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. பல பத்தாண்டு காலமாக அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் செயல்பட்டு வருகிறோம். சுயாதீன தொழில்நுட்ப ஆய்வகங்கள், உலகளாவிய சுகாதார நிபுணர்கள் நடத்திய சோதனைகளில் அதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன.
தயாரிப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கும், நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் டால்க் பவுடரில் இருந்து சோள மாவு அடிப்படையிலான பேபி பவுடர் உற்பத்திக்கு மாறுவதற்கான வணிக முடிவை அறிவித்தோம். அதன் அடிப்படையில், டால்க் பவுடரை இந்தியாவில் உற்பத்தி செய்வதை நிறுத்தியுள்ளோம். எனவே, உரிமத்தை திரும்ப ஒப்படைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.