பொது சிவில் உரிமை சட்டம் குறித்து கருத்து… அவகாசத்தை நீட்டித்த சட்ட ஆணையம்..!
பொது சிவில் சட்டம் குறித்த கருத்துகள், யோசனைகளைப் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளாக இந்திய சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.
பொது சிவில் சட்டம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கு மேலும் 2 வாரங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மதங்கள், ஜாதிகள் உள்ள நிலையில் பல தனிப்பட்ட சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதை நீக்கிவிட்டு அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியாக, பொது சிவில் சட்டத்தை நடைமுறைபடுத்த மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
இது குறித்து பொதுமக்கள், மத அமைப்புகள் கருத்து கூறலாம் என்று இந்திய சட்ட ஆணையம் கடந்த மாதம் 14 ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் மூலமாகவும், காகித வடிவிலும் தங்களது கருத்துகளை அனுப்பி வருகின்றனர். இதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமைக்குள் முடிவடைந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை மேலும் 2 வாரங்கள் நீட்டித்துள்ளதாக மத்திய சட்ட ஆணையம் கூறியுள்ளது.