குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமல்ல; பௌத்தர்கள் வழிபடும் தலம்! – இனத்துவேசம் கக்குகின்றார் வீரசேகர.
“குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது. அதன் காரணமாகத்தான் அங்கு சென்ற தமிழர்களை பொலிஸார் திருப்பியனுப்பியிருக்கக்கூடும் என்று நான் நம்புகின்றேன்.”
இவ்வாறு தெரிவித்தார் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர.
குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ் மக்கள், பிக்குகள் – சிங்கள மக்கள் – பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் சம்பவ இடத்தில் நேரடியாக இருந்த செய்தியாளர்கள் அறிக்கையிட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“குருந்தூர்மலைக்கு பௌத்தர்கள் வழிபடத்தான் சென்றிருந்தார்கள். அவர்கள் வன்முறையைத் தூண்டச் செல்லவில்லை.
குருந்தூர்மலையில் பிரிவினைவாதிகளான தமிழ் சட்டத்தரணிகளும் தமிழ் அரசியல்வாதிகளும் தமிழர்களைத் தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க முயன்றனர். அவர்களின் கனவும் தவிடுபொடியாகிவிட்டது.
இந்தநிலையில் பொலிஸார் மீதும் குருந்தூர் மலை பிக்கு மீதும் வழிபடச் சென்ற பௌத்தர்கள் மீதும் குற்றம்சாட்டுவது ஏற்கக்கூடியது அல்ல.
வடக்கிலும் தெற்கிலும் உள்ள சில ஊடகங்கள் ஒரு தரப்பின் கருத்துக்களை மட்டும் செவிசாய்த்துக்கொண்டு செய்திகளை வெளியிடுகின்றன. அந்த ஊடகங்கள் இரு தரப்பினரது கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும். அதேபோல் செய்தியாளர்களும் உண்மையை வெளியுலகுக்குப் படம் பிடித்துக்காட்ட வேண்டும்.” – என்றார்.