தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆன விவசாயி…!
அண்ணாமலை, படையப்பா படங்களில் நடிகர் ரஜினிகாந்த் ஒரே பாட்டில் கோடீஸ்வரர் ஆனதைப் போல், மராட்டியத்திலும் ஒரு தக்காளி வியாபாரி ஒரே மாதத்தில் கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார். விண்ணை முட்டும் தக்காளி விலை காரணமாக தக்காளிகளை அதிகம் பயிரிட்டிருந்த வியாபாரிக்கு பண மழை கொட்டியுள்ளது.
புனே மாவட்டம் ஜுன்னார் பகுதியைச் சேர்ந்த துக்காராம், தனக்கு சொந்தமான 12 ஏக்கரில் தக்காளி விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் ஈஸ்வர், மருமகள் சோனாலி ஆகியோர் துக்காராமுக்கு உதவியாக இருந்த நிலையில், தக்காளி அறுவடைக்கு தயாராகி உள்ளது. இவரது அதிர்ஷ்டம் அதே நேரத்தில் தக்காளி விலையும் உச்சபட்சமாக உயர்ந்ததால், துக்காராமுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
இதனால் போட்டி போட்டுக்கொண்டு வியாபாரிகள் பலரும் அவரிடம் தக்காளி பெட்டிகளை வாங்கிச் சென்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 13 ஆயிரம் பெட்டிகள் தக்காளி விற்ற துக்காராம், ஒன்றரை கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளார்.
அவர் மட்டுமின்றி, அப்பகுதியைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள், சுமார் 80 கோடி ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை செய்து, அண்ணாமலை, படையப்பாக்களுக்கே சவால் விடும் வகையில் உயர்ந்துள்ளனர்.
உற்பத்தி குறைவு காரணமாக கிலோ 10 ரூபாய்க்கும் குறைவாக விற்பனையான தக்காளிக்கு தற்போது மவுசு அதிகரித்துள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் சராசரியாக கிலோ ரூ. 120க்கு தக்காளி விற்பனையாகி வருகிறது. இந்த விலையேற்றம் குறைவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதால், தக்காளி பயிரிட்ட வியாபாரிகள் கோடீஸ்வரர் ஆகுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக பேசப்படுகிறது.