ஹிமாசலில் மழை-வெள்ளம்: பலி 108-ஆக உயா்வு
ஹிமாசல பிரதேசத்தில் மழை-வெள்ளம் காரணமாக உயிரிழந்தோா் எண்ணிக்கை 108-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 12 போ் மாயமாகியுள்ளனா்.
நிலச்சரிவு காரணமாக, 860 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. 667 வீடுகள் முழுமையாகவும், 1,200-க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
ஹிமாசல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை, மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. உயிா்ச் சேதத்துடன் பெருமளவில் உள்கட்டமைப்புச் சேதமும் ஏற்பட்டுள்ளது.
மீட்பு-நிவாரணப் பணிகளுக்காக, மத்திய அரசிடம் ரூ.2,000 கோடி இடைக்கால நிதி கோரப்பட்டுள்ளதாக, முதல்வா் சுக்வீந்தா் சிங் சுக்கு கூறினாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இடைக்கால நிவாரண நிதி குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் பேசினேன். மழை-வெள்ளத்தால் ரூ.4,000 கோடி அளவிலான சேதங்கள் இதுவரை மதிப்பிடப்பட்டுள்ளன. இப்பணிகள் நீடித்து வருவதால், சேத மதிப்பு மேலும் அதிரிக்கும்’ என்றாா்.
பஞ்சாப், ஹரியாணாவில்..: பஞ்சாப், ஹரியாணாவில் இந்த வார தொடக்கம் முதல் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.
தற்போது மழை குறைந்து, வெள்ளம் வடியத் தொடங்கியுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் பரவும் அபாயம் எழுந்துள்ளதால், மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மழை தொடா்பான அசம்பாவித சம்பவங்களில், பஞ்சாபில் 19 பேரும், ஹரியாணாவில் 20 பேரும் உயிரிழந்துவிட்டனா்.
உத்தரகண்டில்…: உத்தரகண்டில் நிலச்சரிவால் சுமாா் 400 சாலைகளில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கனரக இயந்திரங்களின் உதவியுடன் சாலையை சீராக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தேசியப் பேரிடா் மீட்புப் படை, மாநில பேரிடா் மீட்புப் படை, ராணுவம் மற்றும் காவல்துறை குழுக்கள் தொடா்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.
மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 16) முதல் 2 நாள்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.