வவுனியாவில் தமிழ் – முஸ்லிம் மோதல் வெடிக்கும் அபாயம்!
வவுனியாவில் தமிழ் – முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையிலான மோதல் இனமோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடும் நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலாளிகளை பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லை.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:-
பட்டாணிச்சூர் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கிராமமாகும். அதற்கு அருகில் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வேப்பங்குளம் உள்ளது.
முஸ்லிம் இளைஞர் ஒருவரும் , தமிழ் இளைஞர் ஒருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தனர். நிதிக் கொடுக்கல் வாங்கல் காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். பட்டாணிச்சூர் பகுதியில் முஸ்லிம் இளைஞரின் கடையிலிருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில் தமிழ் இளைஞர் புதிதாகக் கடை ஒன்றைத் திறந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் தமிழ் இளைஞர் காரில் சென்றபோது, முஸ்லிம் இளைஞரின் கடைக்கு முன்பாக வைத்து சிலர் அதனை மறித்து, தமிழ் இளைஞர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தகவல் அறிந்த தமிழ் இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டதால், இரு இளைஞர் குழுக்களிடையேயும் மோதல் மூண்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதும் முஸ்லிம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதேவேளை அந்தப் பகுதியிலிருந்த சி.சி.ரி.வி. கமராக்களையும் அகற்றியுள்ளனர்.
காரில் பயணித்த தமிழ் இளைஞர் உயிருக்குப் போராடிய நிலையில் வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கும் வந்து முஸ்லிம் இளைஞர் குழு, காயங்களுடன் போராடும் தமிழ் இளைஞரின் சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் திரண்ட தமிழ் இளைஞர்களுக்கும், முஸ்லிம் இளைஞர்களுக்கும் இடையில் மீண்டும் மோதல் மூண்டுள்ளது.
மருத்துவமனையில் வைத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். எனினும், தமிழ் இளைஞர் மீது தாக்குதல் நடத்திய எவரையும் இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை.
இந்தச் சம்பவம் இனமோதலாக மாறும் அபாயம் இருப்பதாக வவுனியா மாவட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.