இன, மதவாதத்தை உருவாக்கி அமைதியைச் சீர்குலைக்காதீர்! – விக்கியிடம் சஜித் அணி வலியுறுத்து
இனவாதம், மத வாதத்தை மக்களின் மனங்களில் உருவாக்கி அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனிடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமரர் ஆறுமுகன் தொண்டமானின் அனுதாபப் பிரேரணை மீதான விவாதத்தின்போதே டயனா கமகே இவ்வாறாக விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்தார்.
அவர் அதன்போது மேலும் தெரிவிக்கையில்,
“தமிழ் மக்கள் படும் துன்பங்களை நான் அவதானித்துள்ளேன். ஆனால், வடக்கு, கிழக்கு பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் மிகவும் இனவாத , மத வாத பேதத்துடன் பேசுவதை கடந்த காலங்களில் அவதானித்தோம். அவருக்குக் கூற விரும்புவது என்னவென்றால், நீங்கள் எமக்கு இல்லாமல் போன ஆறுமுகன் தொண்டமானின் புத்தகத்தில் பக்கமொன்றை எடுங்கள். அவர் அவரின் மக்களுக்காகச் சேவை செய்வதற்காக ஜனநாயகத்தைத் தெரிவு செய்த சிறந்த நபராகும்.
வடக்கு மக்களுக்கு வவுனியா தொகுதி அமைப்பாளர் என்ற ரீதியில் இணைந்து பணியாற்றியுள்ளேன். வடக்கு கிழக்குக்கும் நான் போரின் பின்னர் சென்றுள்ளேன்.
சுதந்திரமடைந்து 73 வருடங்கள் ஆகின்றன. ஆனால், அதில் 43 வருடங்களை மாத்திரமே அனுபவித்தோம். மிகுதி 30 வருடங்களையும் கொடும் போரிலேயே கழித்தோம்.
நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தமிழ் மக்களுக்குப் போர் மனநிலை அவசியமில்லை. இனவாதம், மதவாதம் அவசியமில்லை. இது ஒருமித்த நாடு. இலங்கையர் என்ற ரீதியில் இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறான நிலைப்பாட்டிலேயே ஆறுமுகன் தொண்டமான் செயற்பட்டார். அவர் சமாதானம் , நல்லிணக்கத்துடனேயே செயற்பட விரும்பினார்.
இந்நிலையில் விக்கேஸ்வரனுக்குச் சொல்ல விரும்புவது, நீங்கள் இந்த இடத்துக்கு மக்களின் வாக்குகளைப் பெற்று வந்துள்ளமையானது அந்த மக்களுக்காக வேலை செய்வதற்கே ஆகும். அந்த மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அவர்களின் மனங்களில் மகிழ்ச்சியையும் , நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதே உங்களின் கடமையாகும். அதனை விடுத்து இனவாதம், மதவாதத்தை அந்த மக்களின் மனங்களில் உருவாக்கிப் பெற்றுள்ள அமைதியை இல்லாமல் செய்துவிட வேண்டாம். நாங்கள் இந்த நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்” – என்றார்.