எதிர்தாக்குதலில் வெற்றி: நகரின் பெரும்பகுதியை மீட்டது உக்ரைன்.
கடந்த வருடம் பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் இதனை எதிர்த்து போராடி வருகிறது. 500 நாட்களுக்கும் மேலாக இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ரஷியாவிலிருந்து கடினமான தாக்குதல்களை சந்தித்து வருவதாக கூறிய உக்ரைன் இதனை எதிர்கொள்ள நீண்ட தூரம் சென்று தாக்கும் ஆயுதங்களையும், பீரங்கிகளையும் வழங்குமாறு அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளுக்கு கோரிக்கை வைத்தது. ரஷிய படைகள் சென்ற மே மாதம் உக்ரைன் நாட்டின் கிழக்கு நகரமான பாக்முட்டைச் சுற்றியுள்ள பல சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பை கைப்பற்றியது. அப்பகுதிகளை இன்று தங்கள் படைகள் மீட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் பல நவீன ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால் உக்ரைனில் வேரூன்றிய ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் கடுமையாக போரிடும் என எதிர்பார்க்கப்பட்டது. “கடந்த ஒரு வாரத்தில் மேம்படுத்தப்பட்ட திறனுடன் எங்கள் படைகள் பாக்முட் திசை நோக்கி சென்றது. இதன் பயனாக சுமார் 7 கிலோமீட்டர் பகுதி ரஷிய ஆக்ரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
ஆனால் “கார்கிவை சேர்ந்த குப்யான்ஸ்க் (Kupyansk) பகுதியில் ரஷிய படைகள் கடந்த வார இறுதியில் இருந்து தீவிரமாக முன்னேறி வருகின்றன”, என்று உக்ரைனின் துணை பாதுகாப்பு அமைச்சர் கன்னா மல்யார் தெரிவித்துள்ளார். 70 ஆயிரம் மக்கள் வசித்த நகரமான பாக்முட் ரஷிய தாக்குதலுக்கு உள்ளாகி சீர்குலைந்தது. இந்நகரம் ஒயின் மற்றும் உப்புச் சுரங்கத்திற்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.