வயதாவதை குறைக்கும் மாத்திரை: ஹார்வர்டு ஆராய்ச்சியாளர்கள் சாதனை!
இளமை என்பது நிரந்தரமல்ல, எல்லோருக்கும் ஒரு நாள் வயதாகும். வயது அதிகரிப்பதையும், முதுமை அடைவதையும் யாராலும் தடுக்க முடியாது.
இந்நிலையில், வயதினை ஒரு வாரத்திற்குள்ளாகவே குறைக்கும் ரசாயன மாத்திரையை (chemical cocktail) ஹார்வர்டு மருத்துவ பள்ளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 5 முதல் 7 மருந்துகளைச் சேர்த்து இந்த ரசாயன மாத்திரையைத் தயாரித்துள்ளனர்.
மூன்றாண்டுக் கால ஆராய்ச்சியில் எலிகளுக்கும், குரங்குகளுக்கும் இந்த மருந்தினைக் கொடுத்துப் பரிசோதித்துள்ளனர். இதன் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும், மனித செல்களைப் புதுப்பிக்கக்கூடிய மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து டேவிட் சின்க்ளேர் என்ற ஹார்வர்டு ஆராய்ச்சியாளர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், “கரு மரபணுக்களை, மரபணு சிகிச்சையை மாற்றிப் பயன்படுத்துவதன் மூலம் வயதைக் குறைப்பதற்கான சாத்தியம் உள்ளது என்பதை நாங்கள் முன்பே காட்டியுள்ளோம்.
இப்போது ரசாயன காக்டெய்ல் மூலம் இது சாத்தியம் என்பதைக் காட்டுகிறோம். இது மலிவு விலையில் முழு உடல் புத்துணர்ச்சிக்கான ஒரு படி’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கண்டுபிடிப்பு மனிதர்களில் வயதாகும் விளைவுகளை எதிர்த்துப் போராடுகிறது. இதனால் இதனை “இளமையின் ஊற்று மாத்திரை’’ என்று ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர்.