தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்து ரணில் பேசியது என்ன? (வீடியோ)
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான சிறந்த பிரேரணை தாம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தமிழ் கட்சித் தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி விக்கிரமசிங்க தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று (18) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர் ரணில் விக்ரமசிங்க என்றும் நான் ரணில் ராஜபக்ச அல்ல என்றும் தெரிவித்தார்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவே தான் விரும்புவதாகவும் அதிலிருந்து அரசியல் ஆதாயங்களை பெற தான் விரும்பவில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் முழுமையான அதிகாரப் பகிர்வுக்கு இணங்கினால் மாத்திரமே அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம், பட்டியல் 1 இன் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த முழு அதிகாரம் பெற்றுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மாகாணசபைப் பட்டியல் 3ல் உள்ள குறிப்பிட்ட பணிகளை பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே உடன்பாட்டை உள்ளடக்கி அமுல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார். .
வடக்கு, கிழக்கு மக்களுக்கு தாம் ஒருபோதும் அநீதி இழைக்கப் போவதில்லை என்றும், அவர்களுக்காக மேலும் ஏதாவது செய்ய வேண்டுமாயின், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் பாராளுமன்றத்தின் பூரண ஆதரவைப் பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் காங்கசந்துறை துறைமுகம், வவுனியா மற்றும் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதுடன் , வட மாகாணத்தையும் தென்னிந்தியாவையும் இணைக்கும் படகு சேவையை ஏற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணம் மற்றும் மன்னாரில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்தல், வன்னியில் தென்னைச் செய்கையை ஊக்குவித்தல் மற்றும் “யாழ்ப்பாணத்தை” பல்கலைக்கழக நகரமாக நிறுவுதல் ஆகிய நோக்கங்கள் குறித்தும் வடக்கு-கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க, விஜயதாச ராஜபக்ஷ, டக்ளஸ் தேவானந்தா, இராஜாங்க அமைச்சர்களான சுரேன் ராகவன், எஸ். வியாலேந்திரன், எஸ். சந்திரகாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர், சம்பந்தன், எம்.ஏ. சுமந்திரன், சி.வி. விக்னேஸ்வரன், அங்கஜன் இராமநாதன், செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், எஸ். ஸ்ரீதரன், டி. சித்தார்த்தன், சாணக்கிய ராசமாணிக்கம், தவராசா கலையரசன், கே. திலீபன், ஜி. கருணாகரன் மற்றும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் எம்.பி.க்கள் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் அரச அதிகாரிகளும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.