பெண் ஒருவர் நடத்திய சூதாட்ட விடுதி முற்றுகை! – 15 பேர் சிக்கினர்.

பெண் ஒருவரால் நடத்தப்பட்ட பாரியளவிலான சூதாட்ட விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
அங்கொட – தெல்கஹாவத்தையில் உள்ள சொகுசு வீடொன்றில் குறித்த விடுதி இயங்கியுள்ளது.
இதன்போது ஒரு இலட்சம் ரூபா பணத்துடன் 15 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெல்கஹாவத்தையில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் உள்ள குறித்த பெண் பல வருடங்களாக இந்தச் சூதாட்ட விடுதியை முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் நடத்தி வந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
முல்லேரியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நால்வர் மாறுவேடத்தில் குறித்த இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றும், அவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி 20 பேர் கொண்ட பொலிஸ் குழு ஒரே நேரத்தில் வீட்டைச் சுற்றி வளைத்து சந்தேகநபர்களைச் கைது செய்தது என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.