3ஆவது சுற்றுப் பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது சந்திரயான் 3
சந்திரயான் -3 விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவு தொடர்பான ஆய்வுக்காக அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
பின்னர் ஜூலை 17-ம் தேதியன்று 2-வது சுற்றுப்பாதைக்கு சந்திரயான் -3 விண்கலத்தை உயர்த்தும் முயற்சி வெற்றி பெற்றதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், விண்கலத்தை 3-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் பணியை தரைக் கட்டுபாட்டு மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
அடுத்தக் கட்ட உந்துதல் பணி வரும் 20-ம் தேதி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து சந்திரயான் – 3 விண்கலத்தை, இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள சந்திரயான் – 3, நிலவு தொடர்பான பல்வேறு ஆய்வு தகவல்களை இஸ்ரோவிற்கு அனுப்ப உள்ளது.
2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோடிக்கணக்கான இந்தியர்கள் சந்திரயான் 2 விண்கலத்தின் பயணத்தை ஆர்வமுடன் கண்காணித்து வந்தனர். ஆனால் சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்தது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட இஸ்ரோவின் முயற்சிகள் வெற்றிபெறவில்லை.
இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது. கடந்த கால தவறுகளை கருத்தில் கொண்டு சந்திரயான் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளது இஸ்ரோ.