கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை!

தென்மேற்கு பருவமழையால் கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் காணப்படுவதால் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்தொழில் மற்றும் கடற் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று கடற்படை மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடற்பரப்புக்களிலும், புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புக்களிலும் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் 2.5 மீற்றர் உயரத்துக்குக் கடல் அலைகள் அதிகரிக்கக் கூடும் என்றும் அந்தப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.