குருந்தூர்மலை விவகாரம்: பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை! – ஜனாதிபதி உறுதி.
குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட – இந்தச் செயலை தடுத்து நிறுத்தாத சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பியிடம் உறுதியளித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை குருந்தூர்மலையில் தமிழரின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டது. அங்கு பொங்கலிட்டு வழிபட குருந்தூர்மலை விகாரை பிக்குவும் கும்பல் ஒன்றும் தடை ஏற்படுத்தியது. நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்த இவர்களின் செயலுக்குப் பொலிஸார் துணை நின்றிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழேயே இது முன்னெடுக்கப்பட்டது.
இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சித்தார்த்தன் நேற்று (18) ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். இதன்போதே இந்த விடயம் குறித்து முறைப்பாட்டை முழுமையாக தருமாறும், அந்தப் பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.