நாட்டை உலுக்கிய மணிப்பூர் சம்பவம்…வெடித்த தலைமை நீதிபதி..!
பெண்களை வன்முறை கருவியாக பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் தலையிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
மணிப்பூரில் குகி பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மணிப்பூரில் இருந்து வெளியாகியுள்ள வீடியோக்கள் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதாக வேதனை தெரிவித்தார்.
மணிப்பூரில் நடந்தது மனிதத்தன்மையற்ற செயல் என்றும், ஜனநாயகத்தில் இதுபோன்ற சம்பவங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கருத்து தெரிவித்தார்.உலகம் முழுவதும், சண்டைகள் நிறைந்த பகுதிகளில் பெண்கள் வன்முறைக் கருவிகளாகப் பயன்படுத்தப்படுவதாக வேதனை தெரிவித்த தலைமை நீதிபதி, இந்த விவகாரத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்வியெழுப்பினார்.
குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க குறுகிய கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்றும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றம் தலையிடும் என்றும் கூறிய தலைமை நீதிபதி விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.