தமிழக மீனவர்கள் விவகாரம் – இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியா இலங்கை இடையே எரிசக்தி, யுபிஐ பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள், பிரதமர் நரேந்திர மோடி – இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் கையெழுத்தாகின.
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது, இருநாடுகள் இடையேயான பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து, யுபிஐ பணப்பரிவர்த்தனையை இலங்கையில் ஏற்றுக்கொள்வது, பொருளாதார மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். இரு நாடுகள் இடையே விமான தொடர்பை அதிகரிக்க ஒப்புக்கொண்டதாக கூறியுள்ள அவர், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு புதிதாக வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், மீனவர்கள் பிரச்னையில் இரு தரப்பும் மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதனை அடுத்து பேசிய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் வளர்ச்சி அதன் அண்டை நாடுகளுக்கும் நன்மை தரும் என்றும், இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்த போது, இந்தியா துணை நின்று உதவியதாகவும் கூறினார்.