மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த வன்கொடுமை… பொதுமக்கள் போராட்டம்.!
மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு குழுவினர் ஆடைகளை அகற்றி இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மணிப்பூரில் பெரும்பான்மை மைதேயி சமூகத்தினருக்கும், பழங்குடியின குகி சமூகத்தினருக்கும் இடையேயான மோதல் வன்முறையாக உருவெடுத்துள்ளது. இந்த வன்முறைக்கு மத்தியில் கடந்த மே 4-ஆம் தேதி ஒரு சமூகத்தைச் சோ்ந்த ஆண்கள் திரளாகக் கூடி, மற்றொரு சமூகத்தைச் சோ்ந்த இரு பெண்களை ஆடைகள் ஏதுமின்றி சாலையில் அடித்து இழுத்துச் செல்லும் விடியோ காட்சி அண்மையில் சமூக வலைதளங்களில் பரவியது. தடுக்க முயன்ற அவரது சகோதரர் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விடியோ ஆதாரத்தின் அடிப்படையில் பெண்களை ஆடைகளின்றி அழைத்துச் சென்ற கும்பலின் முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் விதிமீறல்கள் தொடர்பாக 657 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. குற்றவாளிகளை பிடிப்பதற்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மணிப்பூர் ஆளுநர் அனுசுயா உய்கே, “பெண்களை அவமதிக்கும் வகையிலும் மனிதத்தன்மையற்ற வகையிலும் இந்த கொடூரமான குற்றத்தை செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், சட்டத்தின்படி அவா்களுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்கவும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபியிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த நிலையில் இரண்டு பெண்களை ஆடைகளை அகற்றி இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்திய சம்பவத்தால் ஆத்திரமடைந்த மக்கள் நீதி கேட்டு வீதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போலீசார்தான் தங்களை அந்த கும்பலிடம் பிடித்துக் கொடுத்தனர் என்றும், நாங்கள் தாக்கப்பட்டபோது அங்கிருந்த காவலர்கள், அங்கு என்ன நடந்தது என்பது தங்களுக்குத் தெரியாது என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.