ராகுல் காந்தி மேல்முறையீட்டு வழக்கு – குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உச்சநீதிமன்றம் உத்தரவு
மோடி சமூகத்தினரை அவதூறாக ராகுல் பேசியதாக குஜராத் எம்.எல்.ஏ., பர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து, சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் ராகுல் காந்தி எம்.பி,.பதவியை இழந்தார்.
இந்நிலையில், குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, ராகுல் காந்தி சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு (ஜுலை 21ம் தேதி) விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்த சூழலில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே மிஸ்ரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் காந்தி மேல் முறையீட்டு வழக்கில் குஜராத் அரசும் மனுதாரர் பர்னேஷ் மோடியும் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்குவிசாரணையை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.