கடலில் மிதந்த 5.3 டன் போதைப் பொருள்: ரூ.7 ஆயிரம் கோடி சரக்கை மடக்கிய இத்தாலிய பொலிஸ்.
இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ (5.3 tons) கோகைன் போதைப் பொருளை ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.7700 கோடி ($946 million) ஆகும். தென் அமெரிக்காவிலிருந்து பயணிக்கும் ஒரு கப்பலை காவல்துறை கண்காணித்து வந்தது. அப்போது சிசிலி ஜலசந்தி பகுதியில் இழுவை படகின் மூலம் எடுத்து செல்வதற்காக அந்த கப்பலிலிருந்து பெரிய பார்சல்கள் கடலில் வீசி எறியப்படுவதை ஒரு கண்காணிப்பு விமானம் கண்டறிந்துள்ளது.
உடனே அந்த இழுவை படகை நிறுத்தி பரிசோதித்தபோது அதில் சில தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளில் பெருமளவில் போதை மருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இச்சம்பவம் தொடர்பாக துனிசியாவை சேர்ந்த இருவர், ஒரு இத்தாலியர், ஒரு அல்பேனியர் மற்றும் ஒரு பிரெஞ்ச் நாட்டவர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தலை தடுத்த காவல்துறையினரை சிசிலி பிராந்திய தலைவர் ரினாடோ ஸ்கிஃபானி வெகுவாக பாராட்டியுள்ளார். “போதைப் பொருள் என்பது நமது சமூகத்தின் கேடு. நம்பிக்கைகளை சிதைத்து குடும்பங்களை அழித்து மரணத்தை விதைக்கும் இரக்கமற்ற நபர்களால் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது” எனவும் அவர் கூறியுள்ளார்.