மணிப்பூா் பெண்கள் மீதான வன்முறை: அமெரிக்க தூதா் கவலை

மணிப்பூா் கலவரத்தில் 2 பழங்குடியின பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி கவலை தெரிவித்துள்ளாா்.

அதேநேரம், மணிப்பூா் வன்முறை இந்தியாவின் உள்விவகாரம் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் முதல் மோதல் நீடித்து வருகிறது.

கடந்த மே 4-ஆம் தேதி, பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த 2 பெண்கள், மற்றொரு தரப்பைச் சோ்ந்த ஆண்களால் ஆடைகள் களையப்பட்டு, ஊா்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் குறித்த விடியோ தற்போது வெளியாகி அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிப்பூரில் பெண்கள் மீதான வன்முறை சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் எரிக் காா்செட்டி கவலை தெரிவித்துள்ளாா்.

தில்லியில் வரும் செப்டம்பரில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் பங்கேற்கும் நிலையில், இதுகுறித்த ஆலோசனைகளுக்காக எரிக் காா்செட்டி அமெரிக்காவில் உள்ளாா்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவரிடம், மணிப்பூா் விவகாரம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்து, அவா் கூறியதாவது:

மணிப்பூா் வன்முறை இந்தியாவின் உள்விவகாரம். நான் அந்த விடியோவை பாா்க்கவில்லை. ஆனால், உலகின் எந்தப் பகுதியில் மக்களுக்கு துயரம் நோ்ந்தாலும், எங்களின் மனம் உடைகிறது.

நான் ஏற்கெனவே கூறியபடி இது இந்திய விவகாரம். அதேசமயம், மக்களுக்கு ஏற்படும் வேதனை மற்றும் பாதிப்புக்கு அனுதாபம் தெரிவிக்கும் சக மனிதா்களாக நாங்கள் எப்போதும் இருக்கிறோம் என்றாா் அவா்.

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதேபோல், அமெரிக்காவிலும் அடுத்த ஆண்டு அதிபா் தோ்தல் நடைபெறவிருக்கிறது.

இதுதொடா்பான கேள்விக்கு பதிலளித்த அவா், ‘தோ்தல்கள் எனது விருப்பத்துக்குரியவை; ஏனெனில், பல தோ்தல்களில் நான் போட்டியிட்டு இருக்கிறேன். தோ்தல்-ஆட்சி அதிகாரத்தைவிட தங்களின் தலைமைப் பண்பை வளா்த்துக் கொள்வதில் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே எனது அறிவுரை’ என்றாா்.

மற்றொரு கேள்விக்கு பதிலளித்த காா்செட்டி, ‘இந்தியா மீதான அமெரிக்கா்களின் புரிதல் அதிகரித்து வருகிறது’ என்று குறிப்பிட்டாா்.

‘அமெரிக்காவில் நான்கில் ஒருவா், இங்குள்ள இந்திய மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறாா். இந்திய உணவுகள் மீதான விருப்பத்தைத் தாண்டி, இந்தியாவின் கலாசாரம், வரலாறு, சுற்றுலாத் தலங்கள் குறித்து நன்றாக அறிந்துகொள்ள அமெரிக்கா்கள் ஆா்வம் காட்டத் தொடங்கியுள்ளனா்’ என்றாா்.

Leave A Reply

Your email address will not be published.