பெண்ணின் வயிற்றில் இருந்து 16 கிலோ கட்டி.. அதிர்ந்து போன மருத்துவர்கள்!
மருத்துவ துறையில் தினம்தோறும் ஏதாவது ஒரு அதிசய நிகழ்வு நடந்து வருவது வழக்கம். பிரசவம், இதய அறுவை சிகிச்சை, மூளை சிகிச்சை போன்ற பல முக்கிய சிகிச்சைகளில் மருத்துவர்கள் திறன்பட செயல்பட்டு வருகின்றனர்.
இதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றி வருகின்றனர். சமீபத்தில் கூட, கழுத்து துண்டிக்கப்பட்ட ஒரு சிறுவனின் தலையை மீண்டும் பொருத்தி, அவருக்கு மறுஜென்மத்தை மருத்துவர்கள் கொடுத்த செய்தி பரவலாக பேசப்பட்டது. இது போன்ற, நிகழ்வுகளால் மருத்துவ துறையின் மீது பெரிய அளவு நம்பிக்கை உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு ஜெய்ப்பூரில் உள்ள பகவான் மஹாவீர் புற்றுநோய் மருத்துவமனையில் (பிஎம்சிஎச்) நிகழ்ந்துள்ளது. 68 வயதான பெண்ணின் வயிற்றில் இருந்து சுமார் 16 கிலோ எடையுள்ள கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை சரியான நேரத்தில் செய்ததால், அப்பெண்ணை மரணத்திலிருந்து காப்பாற்றி உள்ளனர்.
சுமார் 16 கிலோ எடையுள்ள கட்டி தனது வயிற்றில் இருப்பது குறித்து அப்பெண்ணிற்கு தெரிந்திருக்கவில்லை. ஏறக்குறைய மூன்று முதல் நான்கு மாதங்களாக இந்த கட்டியுடன் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த கட்டியானது அவரது சிறுநீரகம் மற்றும் முக்கிய தமனிகளை பாதிக்கும் அளவுக்கு வளர்ந்திருந்தது தான் உயிருக்கே ஆபத்தானதாக கருதப்பட்டது.
இந்த அறுவைசிகிச்சை குறித்து புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் ஷிகா திவாரி கூறுகையில், ‘அந்த பெண்ணின் வயிற்றில் இருந்த கட்டி 16 கிலோவாக வளர்ந்து இருந்தது. மேலும், அது 28 செமீ அளவு பெரிய கட்டியாக இருந்தது. கட்டியின் அளவு மற்றும் எடை காரணமாக, அதன் அறுவை சிகிச்சை மிகவும் சிக்கலானதாகவும், சவாலானதாகவும் இருந்தது. எனவே, இந்த அறுவை சிகிச்சை செய்ய சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலானது.” என்று மருத்துவர் கூறினார்.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்த பிறகு, அப்பெண் தற்போது ஆரோக்கியமாக இருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறினர். இந்த பெண்ணிற்கு 6 மாதங்களாக வாய்வு தொல்லை போன்று இருந்து வந்துள்ளது. அப்போது அதை சாதாரண பாதிப்பு என்று அப்பெண் கருதியுள்ளார். ஆனால், அவரது அலட்சியத்தின் காரணமாக அந்த கட்டி 28 செமீ அளவுக்கு வளர்ந்தது. கட்டியின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய காரணத்தால், சில மருத்துவர்களை சந்தித்துள்ளார். அவர்களால் இதற்கான காரணம் குறித்து சரிவர கண்டறிய முடியவில்லை.
இதன் பிறகு தான், அப்பெண் ஜெய்ப்பூரில் உள்ள பிஎம்சிஎச் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவரது வயிற்றில் உள்ள 16 கிலோ கட்டி இருப்பதை கண்டறிந்தனர். மேலும், இந்த கட்டி சிறுநீரகம் மற்றும் சில முக்கிய இரத்த தமனிகளின் பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன் பின்பு, அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியதன் பெயரில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம், 16 கிலோ எடையுள்ள கட்டி நீக்கப்பட்டு, தற்போது அப்பெண் நலமாக உள்ளார்.