குஜராத்தில் மேக வெடிப்பு: குடியிருப்புகளை சூழ்ந்த மழை வெள்ளம்
குஜராத் மாநிலத்தின் தெற்கு மற்றும் செளராஷ்டிரா பிராந்தியத்தில் உள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடா்ந்து கனமழை பெய்தது.
நகரங்கள், கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீா் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அணைகளில் நீா் மட்டம் உயா்ந்து வரும் நிலையில், நதிகளிலும் நீா்மட்டம் அபாயகர அளவைத் தாண்டியுள்ளது.
நவசாரி, ஜுனாகத் உள்ளிட்ட மாவட்டங்கள் இடைவிடாத கனமழையினால் கடுமையாகப் பாதிக்கப்படுள்ளன.
நவசாரி நகரத்தில் தந்தையும், மகனும் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை மீட்கப்பட்டாா். மகனைக் கண்டறியும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜுனாகத் நகரத்தில் கால்நடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
தெற்கு குஜராத், செளராஷ்டிரம்-கட்ச் பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கனமழை முதல் மிகத் தீவிர கனமழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
குஜராத்துக்கு அருகில் உள்ள தாத்ரா-நகா் ஹவேலி யூனியன் பிரதேசத்திலும் கனமழை பெய்து வருகிறது. சில்வாசா நகரத்தில் உள்ள பாலத்தை வெள்ளிக்கிழமை இரவு கடக்க முயன்ற காா் ஒன்று, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் இருந்த தந்தையும் மகனும் உயிரிழந்த நிலையில், அவா்களது உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஹிமாசல பிரதேச மாநிலத்திலும் மேகவெடிப்பைத் தொடா்ந்து மிக பலத்த மழை பெய்து வருகிறது. மாநில தலைநகா் சிம்லாவில் உள்ள கலாலா கிராமத்தில் பணிபுரிந்து வரும் நேபாள தம்பதி, சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
அந்த மாவட்டத்தின் பாடியாரா கிராமத்தில் ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கில் 3 போ் அடித்துச் செல்லப்பட்டனா். அவா்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
ஹிமாசலின் சிம்லா மாவட்டத்தில் பலத்த மழையைத் தொடா்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வாகனங்கள். ~உ.பி. மாநிலம் பிஜ்னோா் மாவட்டத்தில் பெருக்கெடுத்த கோட்வாலி நதியில் சனிக்கிழமை சிக்கிய பேருந்திலிருந்து மீட்கப்பட்ட பயணிகள்.