மணிப்பூரில் வெகுண்டெழுந்த பெண்கள்…கைதானவர்களின் வீடுகளுக்கு தீ வைப்பு!
மணிப்பூரில் கடந்த மே 4 ஆம் தேதி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணப்படுத்தி ஊர்வமலாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், 5-வதாக யும்லேம்பம் நுங்சிதோய் என்ற 19 வயது நபர் மற்றும் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 4 பேரை, காவல்துறையினர் 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த வன்கொடுமை செயலில் ஈடுபட்ட மற்ற குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைதுசெய்யும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே, பழங்குடியின பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டித்து அம்மாநிலம் முழுவதும் மகளிர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நோங்க்பாக் பகுதியைச் சேர்ந்த ஹீராதாஸ் வீட்டை அப்பகுதி பெண்கள் வியாழன்று தீவைத்து எரித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட காங்க்புகி பகுதியைச் சேர்ந்த 2ஆவது நபரின் வீட்டையும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் அடித்து நொறுக்கி தீவைத்தனர்.
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கும்பகர்ணன் போன்று வாய் திறக்காமல் இருந்ததாக காங்கிரஸ் எம்.பி ஆதிர்ரஞ்சன் சவுத்ரி கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்குவங்க மாநிலம் முர்ஷிபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழங்குடியினத்தை சேர்ந்தவர் குடியரசுத் தலைவராக இருக்கும் போதிலும், நாட்டில் உள்ள பழங்குடியின மக்களின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போன்று, இந்த விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் திரௌவுபதி முர்முவுக்கு ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கடிதம் எழுதியுள்ளார். அதில் மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க குடியரசு தலைவர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, மணிப்பூரில் அசம்பாவிதங்கள் நேராத வகையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.