இந்தியா – இலங்கை நிலத் தொடர்பு: தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! – சிங்களக் கடும்போக்காளர்களிடமிருந்து கிளம்புகின்றது எதிர்ப்பு.
“இந்தியா, இலங்கையில் காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக்கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.”
இவ்வாறு ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்தியப் பயணத்தின்போது இலங்கையையும் இந்தியாவையும் நில ரீதியாக இணைப்பது தொடர்பான சாத்தியப்பாட்டு ஆய்வுக்கு இணக்கம் காணப்பட்டது. இது தொடர்பில் சரத் வீரசேகர கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் கடற்படைத் தளபதி என்ற ரீதியிலும் மக்களின் பிரதிநிதி என்ற ரீதியிலும் இந்தக் கருத்தை அரசிடம் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தியா காலூன்றினால் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இலங்கையில் இருந்து துண்டாடப்படும். இதற்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் இடமளிக்கக்கூடாது. அது தேசிய பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலானது.” – என்றார்.