தமிழர்களின் தேவை நிம்மதி மட்டும்தான்! – சமஷ்டியும் தனிநாடும் அவர்களின் கோரிக்கையல்ல என்கிறார் பிரதமர்.
“தமிழ் மக்கள் நிம்மதியுடன்தான் வாழ விரும்புகின்றார்கள். அவர்கள் ஒற்றையாட்சி வேண்டும் என்றோ சமஷ்டி வேண்டும் என்றோ விடுதலைப்புலிகள் கோரிய தனிநாடு வேண்டும் என்றோ ஒருபோதும் கோரவில்லை.”
இவ்வாறு பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழர்கள் ஒற்றையாட்சியைக் கோருகின்றார்களா? சமஷ்டியாட்சியைக் கோருகின்றார்களா? தனி நாட்டைக் கோருகின்றார்களா? என்பதை அறியத் துணிவு இருந்தால் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் சவால் விடுத்திருந்தார். இது தொடர்பில் பிரதமர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சமஷ்டிக் கோரிக்கையையும் தனி நாட்டுக் கோரிக்கையையும் விடுதலைப்புலிகளும் தமிழ் அரசியல்வாதிகளும்தான் கோரி வந்தனர். ஒரு பக்கத்தில் தமிழ் அரசியல்வாதிகள் சமஷ்டி வேண்டும் என்று கோர மறுபக்கத்தில் விடுதலைப்புலிகள் தனி நாடு வேண்டும் என்று கோரினார்கள். இறுதியில் ஒன்றும் நடக்கவில்லை. இந்த ஒற்றையாட்சி நாட்டுக்குள்தான் மூவின மக்களும் இன்று வாழ்கின்றார்கள்.” – என்றார்.