கிரிக்கெட் சூதாட்ட தரகர் வீட்டில் கட்டுக்கட்டாக சிக்கிய பணம்…!

மகாராஷ்டிராவில் கிரிக்கெட் சூதாட்ட தரகரின் வீட்டில் கட்டுக்கட்டாக 17 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், தரகர் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் 58 கோடி ரூபாய் முதலீடு செய்து இழந்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து, நாக்பூர் அருகே உள்ள கோண்டியா பகுதியைச் சேர்ந்த கிரிக்கெட் சூதாட்ட தரகர் சோந்து நவரத்ன ஜெயின் என்பவருக்கு சொந்தமான இடத்தில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
நவரத்ன ஜெயின் வீட்டில் கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுகளைக் கண்டு காவல்துறையினரே மிரட்சியடைந்தனர்.
அவற்றை கைளால் எண்ண முடியாது என்பதால், உடனடியாக இயந்திரங்களைக் கொண்டு வந்தது எண்ணி முடித்தனர்.
நவரத்ன ஜெயின் வீட்டில் இருந்து 17 கோடி ரூபாய், 4 கிலோ தங்கம், 200 கிலோ வெள்ளிப்பொருட்களை பறிமுதல் செய்து பெட்டி பெட்டியாக காவலர்கள் தூக்கிச் சென்றனர். இதனிடையே, சூதாட்ட தரகர் துபாய்க்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.