மணிப்பூர்: காவலில் இருந்த இளைஞரை அடித்தே கொன்ற கும்பல்!
மணிப்பூரில் வன்முறை தொடங்கிய மே மாதம் முதல் வாரத்தில் போலீஸ் காவலில் இருந்த குக்கி இளைஞரை வன்முறைக் கும்பல் அடித்தே கொன்ற சம்பவம் இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.
மணிப்பூரில் மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த குக்கிகளுக்கும் சமவெளியில் வசிக்கும் மைதேயி இனத்தினருக்கும் இரு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து மோதல்கள் நடந்துவருகின்றன.
இந்த மோதல்களில் பெருமளவில் குக்கி பழங்குடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு குக்கி இனப் பெண்கள் தாக்கப்பட்டு நிர்வாணமாகக் கொண்டுசென்று பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் இரு மாதங்களுக்குப் பிறகு அண்மையில் வெளியான ஒரு விடியோ மூலம் அம்பலமாகி உலகையே உலுக்கியது.
வன்முறை தொடங்கியபோது, குக்கி இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதும் இப்போது தெரிய வந்திருக்கிறது.
மைதேயி இனத்தைச் சேர்ந்தவரான மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங் பற்றிய பதிவொன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததற்காக குக்கி இனத்தைச் சேர்ந்த ஹங்லால்முவான் வைபேயைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
மே 4 ஆம் தேதி இவரை நீதிமன்றத்தில் நிறுத்திய பிறகு சஜிவா சிறைக்குக் காவல்துறையினர் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். அப்போது பொரம்பட் என்ற இடத்தில் இவர்களை ஒரு வன்முறைக் கும்பல் வழிமறித்து நிறுத்தியது.
காவல்துறையினரிடமிருந்த ஆயுதங்களைப் பறித்துக்கொண்ட கும்பல், அந்த இளைஞரை அடித்தே கொன்றுவிட்டிருக்கிறது. இந்தத் தாக்குதலில் சம்பவ இடத்திலிருந்த காவல்துறையினர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகப் பல்வேறு திசைகளில் சிதறியோடிவிட்டனர்.
இதுபற்றி பொரம்பட் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது. இரு நாள்களுக்குப் பிறகு காவலில் மரணம் என்பதாகத் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பெண்களை நிர்வாணமாகக் கொண்டுசெல்லும் விடியோ வெளியானதைத் தொடர்ந்து, குக்கி பழங்குடியினருக்கு எதிரான பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.