இலங்கை முதல் இன்னிங்சில் 166 ரன்னுக்கு சுருண்டது.
இலங்கை சென்றுள்ள பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. காலேயில் நடந்த முதல் டெஸ்டில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி வீரர்கள் திணறினர். 36 ரன்கள் எடுப்பதற்குள் முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
நெருக்கடியில் தவித்த இலங்கை அணியை தினேஷ் சண்டிமால்-தனஞ்சயா டி சில்வா ஜோடி சரிவிலிருந்து மீட்டது. பொறுப்புடன் ஆடி அரைசதம் அடித்த தனஞ்செய டி சில்வா 57 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 37 ரன்னிலும் அவுட்டாகினர்.
ரமேஷ் மெண்டிஸ் 27 ரன்கள் எடுத்தார். இறுதியில், இலங்கை அணி 48.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சை ஆடியது. தொடக்க ஆட்டகாரர் இமாம் ஹல் உக் 6 ரன்னில் அவுட்டானார்.
அப்துல்லா ஷபீக்குடன் ஷான் மசூத் ஜோடி சேர்ந்தார். இருவரும் அரை சதம் கடந்தனர். 2வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்த நிலையில் ஷான் மசூத் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. அப்துல்லா ஷபீக் 74 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.