கொடைக்கானல் மலைப் பாதையில் ரூ.4.50 லட்சம் வழிப்பறி…4 பேர் கைது..!
கொடைக்கானல் மலைப்பாதையில் வழிப்பறியில் ஈடுபட்டு 4,50,000 ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரையை சேர்ந்த தர்மராஜ் என்பவர் சென்னையில் ஏசி மெக்கானிக் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த மாதம் 22ஆம் தேதி தனது கார் ஓட்டுநர் மனோஜ் உடன் கொடைக்கானலுக்கு சென்றுள்ளார். மறுநாள் நள்ளிரவில் இருவரும் சென்னைக்கு
திரும்பியுள்ளனர். அப்போது வத்தலகுண்டு பிரதான சாலையில் சென்றுக்கொண்டிருந்தபோது, இன்னோவா காரில் வந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்துள்ளது.
பின்னர் ஓட்டுநர் மனோஜை இன்னோவா காரில் ஏர சொல்லிவிட்டு, தர்மராஜ் கழுத்தில் கத்தியை வைத்து இருவரையும் வத்தலகுண்டு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தர்மராஜிடம் இருந்த 4,50,000 ரூபாய் பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு மனோஜை திரும்ப ஒப்படைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது குறித்து தர்மராக் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஓட்டுநர் மனோஜ் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டதில், தர்மராஜுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் பண தகராறு இருந்ததாகவும், தர்மராஜ் பணம் தர வேண்டியதன் காரணமாக மணிகண்டன், மனோஜை தர்மராஜிடம் ஒட்டுனராக பணியில்
சேர்த்து அவரை கண்காணித்து வழிப்பறியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் மணிகண்டன், சண்முக சுந்தரம், மதன், மனோஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், 4 பேரையும்
கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் கொள்ளைக்கு
பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் வத்தலக்குண்டு மலைப்பாதையில் நள்ளிரவில் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் சுற்றுலா பயணிகள் மற்றும்
வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.